எகிறி பாய்ந்தது தங்கம் விலை சவரன் ரூ.64,000 தாண்டியது
எகிறி பாய்ந்தது தங்கம் விலை சவரன் ரூ.64,000 தாண்டியது
ADDED : பிப் 12, 2025 12:39 AM
சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று, ஆபரண தங்கம் விலை கிராம், 8,060 ரூபாய்க்கும்; சவரன், 64,480 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புகளுக்கு, சீனா, மெக்சிகோ உட்பட பல நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்நாடுகளும், அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
நம் நாட்டிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,980 ரூபாய்க்கும்; சவரன், 63,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில், 8,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 64,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப், தினமும் வெளியிடும் புது அறிவிப்புகளால், பீதியடைந்துள்ள உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
அமெரிக்கா டாலரை மையமாக வைத்து தான், தங்கச் சந்தை நடக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

