ADDED : ஜூலை 26, 2025 08:10 PM
சென்னை:தமிழகத்தில் இம்மாதம், 23ல் ஆபரண தங்கம் சவரன் விலை, 75,000 ரூபாயை தாண்டி, புதிய உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு, 1,760 ரூபாய் குறைந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் பாதுகாப்பு கருதியும், அதிக லாபம் கிடைப்பதாலும் முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது. இதன் விளைவாக, நம் நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்தது.
தமிழகத்தில் கடந்த, 23ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை முதல்முறையாக, 75,000 ரூபாயை தாண்டி, 75,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்த நாளே சவரனுக்கு, 1,000 ரூபாய் சரிவடைந்தது. அதற்கு அடுத்த நாள், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது .
நேற்று முன்தினம் தங்கம் கிராம், 9,210 ரூபாய்க்கும், சவரன், 73,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 128 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 9,160 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 73,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் குறைந்து, 126 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை, மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு, 1,760 ரூபாய் சரிவடைந்துள்ளது.