ADDED : அக் 29, 2024 11:48 PM
சென்னை:தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரன் விலை, 59,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு, 2,300 ரூபாய் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,315 ரூபாய்க்கும்; சவரன், 58,520 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 7,375 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 59,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் 30ல் தங்கம் சவரன், 56,640 ரூபாய்க்கு விற்பனையானது. எனவே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு 2,360 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
சில நாடுகளில் நிலவும் போர் உள்ளிட்ட காரணங்களால், பாதுகாப்பு கருதியும், அதிக லாபம் கிடைப்பதால் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாகவும், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.