UPDATED : மே 07, 2025 12:19 AM
ADDED : மே 06, 2025 11:11 PM

சென்னை, : கடந்த இரு நாட்களில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 2,760 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டு முறை விலை ஏறுவதால், கிராம் விலை, 10,000 ரூபாயை நோக்கி பயணிக்கிறது.
சர்வதேச சந்தைக்கு ஏற்ப, உள்நாட்டில் தங்கம் விலை தினமும் காலையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, கடந்த மாதம் தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர்.
புதிய உச்சம்
இதனால், தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில், புதிய உச்சத்தை நோக்கி பயணித்தது.
தமிழகத்தில் ஏப்ரல், 22ல், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,290 ரூபாய்க்கும், சவரன், 74,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதுவே உச்ச விலை. பின், தங்கம் விலை சற்று குறைந்து, கடந்த 3ம் தேதி, 8,755 ரூபாய்க்கும், சவரன் 70,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அடுத்த நாள் விலை மாறவில்லை.
தற்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் அபாயம் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச பொருளாதாரத்தில் பதற்றம் ஏற்பட்டுஉள்ளது.
இதனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்தது. அன்று மொத்தமாக கிராம் விலை, 145 ரூபாய் உயர்ந்து, 8,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மீண்டும் உயர்வு
சவரனுக்கு, 1,160 ரூபாய் அதிகரித்து, 71,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராம், 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய் உயர்ந்து, 9,025 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் அதிகரித்து, 72,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மாலையில் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் உயர்ந்து, 9,100 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, 72,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு, 2,760 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, என்.ஏ.சி., ஜுவல்லர்ஸ் தலைவர் அனந்த பத்மநாபன் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வரும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் மோசமாகி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையே தீர்வு ஏற்படும் சூழல் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புகள், சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன.
இதுபோன்ற காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.