UPDATED : ஜூலை 27, 2024 12:07 AM
ADDED : ஜூலை 27, 2024 12:01 AM

சென்னை: தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டதால், தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 3,200 ரூபாய் குறைந்துள்ளது. இதனால்,
பலரும் நகை வாங்க ஆர்வம் காட்டுவதால், நகைகள் விற்பனை அமோகமாக உள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள நகைக்கடைகளில் தினமும் சராசரியாக, 4,500 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. ரஷ்யா, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரம் வரை, சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வந்தனர்.
அதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது. அதன் விளைவாக நம் நாட்டிலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.
மக்கள் கவலை
தமிழகத்தில் இம்மாதம் 17ம் தேதி, எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 55,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை தொடர்ந்து உயரும் என்பதால், மக்கள் கவலை அடைந்தனர். பின், தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரை குறைந்து, இம்மாதம் 23ம் தேதி, சவரன் 54,600 ரூபாய்க்கு விற்பனையானது.
அன்று காலை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், அன்று மட்டும் சவரனுக்கு, 2,200 ரூபாய் குறைந்தது. அன்று முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து
வருகிறது.
நேற்று முன்தினம் கிராம் தங்கம் 6,430 ரூபாய்க்கும்; சவரன் 51,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம் 89 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 6,415 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 51,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது; வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்தாண்டு ஜனவரியில் இருந்து கடந்த வாரம் வரை தங்கம் சவரனுக்கு 8,080 ரூபாய் அதிகரித்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் கிராமுக்கு 410 ரூபாயும்; சவரனுக்கு 3,280 ரூபாயும் சரிவடைந்துள்ளது.
வரும் நாட்களில்
தங்கம் விலை மேலும் உயரும் என்ற சந்தேகம் காரணமாக, தற்போது பலரும் நகைகளை வாங்கி வருகின்றனர். விசேஷ நாட்களில் நகை வாங்க, மக்கள் நகை கடைகளில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டங்களில் பணம் சேமித்து வருகின்றனர்.
அவர்களும் தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து, முதிர்வு காலம் முடிவடைதற்கு முன், தற்போது சேமிப்பு திட்டங்களை ரத்து செய்து, கூடுதல் பணம் செலுத்தி நகை வாங்குகின்றனர்.
மீண்டும் உயரலாம்
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:தங்கம் விலை வரும் நாட்களில் விலை உயரும் என கருதி, தற்போது பலரும் நகைகளை வாங்கி வருகின்றனர். இதனால், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, 25 - 30 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.
பல வாடிக்கையாளர்கள், 'தங்கம் விலை வரும் நாட்களில் உயருமா...' என்று ஆலோசனை கேட்டபடி உள்ளனர். தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்கம் விலை குறைந்து வருவதால், பொதுமக்கள் அதிகம் வாங்கும் அதே வேளையில், தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை, நம் நாளிதழின் வேறொரு பக்கத்தில் படிக்கலாம்!

