ADDED : மார் 27, 2025 12:52 AM
சென்னை:சட்டசபையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை எழுந்தது.
திருப்போரூர் தொகுதி வி.சி., எம்.எல்.ஏ., பாலாஜி பேசும்போது, ''அம்பேத்கர் உள்ளிட்டோரின் சிந்தனைகளை, என் சிந்தையில் ஏற்றி, என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கும், என் தந்தைக்கு துணையாக இருக்கக்கூடிய என் அன்னை, என் மனைவி ஷர்மிளா ஆகியோர், மாடத்தில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி,'' என்றார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், ''எம்.எல்.ஏ., பாலாஜி, தன் துணைவியார் மாடத்தில் இருந்து பார்ப்பதாகக் கூறினார். அதை கேட்கும்போது, கம்பராமாயணத்தில் வரும், 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்ற வரி நினைவுக்கு வருகிறது,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு, ''இங்கு அவரும் நோக்கினார், அவர்களும் நோக்கினர், அவை முன்னவரும் நோக்கினார்,'' எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.