ADDED : பிப் 01, 2025 10:33 PM
சென்னை:சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன் தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,730 ரூபாய்க்கும்; சவரன், 61,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 61,960 ரூபாய்க்கு விற்பனையானது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான வரி குறைப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், அதன் விலை மதியம் மேலும் உயர்ந்தது.
அதன்படி நேற்று மதியம், தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 7,790 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 62,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தபடி கனடா, மெக்சிகோ, கொலம்பியா நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.
மேலும் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 சதவீதம் இறக்கு மதி வரி விதித்துள்ளார். இதுபோன்ற முடிவுகள், உலக பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக, பங்கு சந்தை உள்ளிட்ட முதலீடுகளை தவிர்த்து, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி குறைப்பு போன்ற சாதகமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால், மதியத்திற்கு மேல் உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.