ADDED : ஜூலை 25, 2024 10:29 AM
சென்னை: நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை வரும், 14ம் தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்.,5ம் தேதி, தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு, மத்திய அரசின் சார்பில், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில், 386 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கும் தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
இந்நிலையில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தவர்களை மாவட்ட அளவில் வரவழைத்து, விருதுக்கான கட்டுப்பாடுகளை பின்பற்றி, மாவட்ட அளவில் பரிந்துரை பட்டியலை தயாரிக்க வேண்டும். வரும், 14ம் தேதிக்குள் இந்த பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.