ADDED : ஜன 25, 2024 01:57 AM
சென்னை:'குடும்பத்தின் அதிகார பசிக்கு இன்னும் எத்தனை ஆண்டு காலம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் கோபாலபுரம் குடும்பம்?' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தமிழகத்தில் தடை விதித்ததே தி.மு.க. தான் என்பதை மக்கள் மறந்திருப்பர் என்று நினைத்து மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கை திறந்து வைத்திருக்கும் முதல்வர் புதிய ஏமாற்று கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் 2011 ஜூலை 11ல் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
பசையான மத்திய அமைச்சர் பதவிகளை பெற்று ஊழலை மட்டுமே முழு நேர வேலையாக செய்த தி.மு.க.வுக்கு அப்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க நேரமில்லை.
ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த 2016 ஜனவரியில் பிரதமர் மோடி அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிட்ட அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உடனே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசிடம் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு அரசாணையை இயற்றுமாறு அறிவுறுத்தினார். அதன்படி 2017 ஜனவரியில் பல வற்புறுத்தல் ஆலோசித்தலுக்கு பின் அன்றைய தமிழக அரசு ஒரு அரசாணையை நிறைவேற்றியது.
அதை எதிர்த்து நடந்த வழக்கில் 2022 டிசம்பரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதற்கு தேவையான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
அதன்படியே ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதே தவிர தி.மு.க.வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தி.மு.க. கூட்டணி ஜல்லிக்கட்டை தடை செய்ததால்தான் பா.ஜ.வால் தடையை விலக்க முடிந்தது என்று வேண்டுமானால் தி.மு.க. பெருமைப்பட்டு கொள்ளலாம்.
காவிரி பிரச்னை கச்சத்தீவு பிரச்னை ஜல்லிக்கட்டு தடை ஆகட்டும் எப்போதுமே தமிழ் பாரம்பரியத்தை விட தமிழர்களின் நலனை விட பதவி தான் தி.மு.க.வுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளின் துவக்கமாக தி.மு.க.வாக தான் இருந்து வருகிறது.
தன் குடும்பத்தின் அதிகார பசிக்கு இன்னும் எத்தனை ஆண்டு காலம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் இந்த கோபாலபுரம் குடும்பம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.