4 ஆண்டுக்கு பின் கோரிக்கைகள் வரவேற்பு; தேர்தல் நெருங்குவதால் அரசு சுறுசுறுப்பு
4 ஆண்டுக்கு பின் கோரிக்கைகள் வரவேற்பு; தேர்தல் நெருங்குவதால் அரசு சுறுசுறுப்பு
UPDATED : மே 16, 2025 12:56 AM
ADDED : மே 16, 2025 12:00 AM

சென்னை: ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளின் பணியாளர்கள் மற்றும் மின் வாரியம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோரின் முக்கிய கோரிக்கைகளை, தமிழக அரசு சேகரித்து வருகிறது. அவற்றை, சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அரசு துறை வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றியில், அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகள் முக்கிய பங்கு வகித்தன. ஏனெனில், '10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படாத, அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை, ஆட்சிக்கு வந்த உடனே நிறைவேற்றுவோம்' என, தி.மு.க, வாக்குறுதி அளித்ததே முக்கிய காரணம். ஆனால், அக்கட்சி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதுவரை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான புதிய பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் போன்றவை நிறைவேற்றப்படவில்லை.
இதனால், தி.மு.க., அரசின் மீது, அனைத்து துறைகளின் பணியாளர்களும், கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் ஓட்டுகள் கிடைக்கவில்லை என்றால், ஆட்சிக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதை, தி.மு.க., மேலிடம் உணர்ந்துள்ளது.
எனவே, நிதி நெருக்கடி இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகளில், முக்கியமானவற்றை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி, நிதித்துறைக்கு முதல்வர் தரப்பில் இருந்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, நிதித்துறை ஆலோசனையின்படி, அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளில், இரண்டு, மூன்று முக்கிய கோரிக்கைகளுக்கு, தீர்வு காண நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், மின் வாரியத்தில், காலியிடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில், பணியாளர்களை நியமித்து கொள்ள நிதித்துறை ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, ஒவ்வொரு துறையினரின் முக்கிய கோரிக்கைகள் தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.