வெள்ளத்தில் மிதக்கும் பயிர்கள் காப்பீடு செய்ய அரசு 'அட்வைஸ்'
வெள்ளத்தில் மிதக்கும் பயிர்கள் காப்பீடு செய்ய அரசு 'அட்வைஸ்'
ADDED : நவ 21, 2024 09:31 PM
சென்னை:டெல்டா மாவட்டங்களில், வெள்ளத்தில் மிதக்கும் பயிர்களுக்கு, விரைந்து காப்பீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி நடைமுறையில் உள்ளது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி, 13 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கும் என, வேளாண் துறை கணக்கு போட்டது. ஆனால், சாகுபடி பரப்பு இன்னும் அதிகரிக்கவில்லை.
சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடும் முறையாக செய்யப்படவில்லை. வங்கிக்கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமே, கட்டாயத்தின் அடிப்படையில் காப்பீடு செய்துள்ளனர். மற்ற விவசாயிகள் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில், சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இதனால், 2 லட்சம் ஏக்கர் பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்தது, முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மழை ஓய்ந்து விட்டால், வெள்ளநீர் இயல்பாக வடிந்துவிடும். மழை தொடர்ந்தால், பயிர்கள் பாதிக்கப்படும். வயல்களில் தேங்கியுள்ள வெள்ளநீரை, வெளியேற்றும் பணிகளில் ஈடுபட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
பயிர்கள் பாதித்தால், காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு, இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்களுக்கும் காப்பீடு செய்ய, தேவையான பணிகளை செய்யும்படி, வேளாண் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.