தமிழகம் மட்டுமே அமலாக்க துறை கண்களுக்கு தெரிகிறது ஐகோர்ட்டில் அரசு குற்றச்சாட்டு
தமிழகம் மட்டுமே அமலாக்க துறை கண்களுக்கு தெரிகிறது ஐகோர்ட்டில் அரசு குற்றச்சாட்டு
ADDED : நவ 01, 2025 12:49 AM
சென்னை: 'குஜராத், பீஹார் போன்ற மாநிலங்களில் நடக்கும், சட்ட விரோத மணல் கொள்ளை தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்காத அமலாக்க துறைக்கு, தமிழகம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு குற்றம் சாட்டியது.
படுகொலை மணல் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ், 2023ல் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பதிவான நான்கு வழக்குகள் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட பிரிவுகளின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக்கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், அமலாக்க துறை கடிதம் அனுப்பியது.
அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், தாங்கள் அனுப்பிய தகவல்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறையின் சென்னை மண்டல உதவி இயக்குநர் கிராந்தி குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
சட்டவிரோதம் அப் போது, 'ஒரு விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை, மற்றொரு விசாரணை அமைப்பான மாநில காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி, எப்படி வழக்கு தொடர முடியும்; பகிர்ந்து கொண்ட தகவல்கள் அடிப்படையில், மாநில காவல் துறையிடம் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி, நீதிமன்ற உத்தரவை கோர முடியுமா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் ஆஜராகி, ''சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக, மிகவும் ரகசியமாக சேகரிக்கப்பட்ட தகவல்களை, மாநில காவல் துறைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டது.
இதுபோன்ற கோரிக்கையுடன் வழக்கு தொடர, அமலாக்க துறைக்கு சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:
அமலாக்கத்துறை தகவல்களை பகிர்ந்ததால் மட்டும், அதை ஏற்று வழக்கு பதிவு செய்ய மாநில காவல்துறை ஒன்றும், 'போஸ்ட் மாஸ்டர்' அல்ல. உத்தர பிரதேசம், குஜராத், பீஹார் போன்ற மாநிலங்களில், தமிழகத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக, மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அந்த மாநிலங்களின் வழக்குகள் மீது, எந்த நடவடிக்கையும் அமலாக்க துறை எடுக்கவில்லை. ஆனால், தமிழகம் மட்டுமே அமலாக்கத்துறையின் கண்களுக்கு தெரிகிறது.
சில மாநிலங்களை மட்டுமே தேர்வு செய்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் மனப்பான்மையை அமலாக்கத்துறை கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், 'மாநில காவல்துறையும், அமலாக்கத்துறையும் புலனாய்வு அமைப்புகள். இரண்டும் ஒன்றுக்கொன்று சந்தேகமோ அல்லது சண்டையோ வைத்து கொள்ளக்கூடாது' என்று கூறியதுடன், மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

