மாணவியர் தற்காப்பு பயிற்சிக்கு அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
மாணவியர் தற்காப்பு பயிற்சிக்கு அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 24, 2025 10:46 PM
சேலம்:அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, ஆக., 1 முதல், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி அளிக்க உத்தர விடப்பட்டு, 15.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவியருக்கு, மூன்று மாதங்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, 6,045 நடுநிலைப் பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு பயிற்சி அளிக்க, 7.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 5,804 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், கூடுதல் மாணவியருக்கு பயிற்சி அளிக்க வசதியாக, 8.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்ககம், சமீபத்தில் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்ப பயிற்சிகளில் ஒன்றை, பள்ளி மேலாண் குழுவினர் தேர்வு செய்து, அதற்கான பயிற்சியாளரை நியமித்து கொள்ளலாம்.
வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம், மூன்று மாதங்களுக்கு, 24 வகுப்புகள் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், மாணவியரை பயிற்சிக்கு வேறு பள்ளிக்கு அழைத்துச் செல்லக்கூடாது. ஆக., 1 முதல், பயிற்சி வகுப்பை துவங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.