அபார்ட்மென்ட்களில் வாகன 'சார்ஜிங்' வசதி கட்டாயம் பொது கட்டட விதிகளை திருத்தியுள்ளது அரசு
அபார்ட்மென்ட்களில் வாகன 'சார்ஜிங்' வசதி கட்டாயம் பொது கட்டட விதிகளை திருத்தியுள்ளது அரசு
ADDED : நவ 10, 2025 12:56 AM
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில், மின்சார வாகனங்களுக்கான, 'சார்ஜிங்' வசதி ஏற்படுத்துவதை கட்டாயமாக்கும் வகையில், பொது கட்டட விதிகள் திருத்தி அமைக்கப் பட்டு உள்ளன.
நாடு முழுதும், மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், பெட்ரோல், டீசல் செலவை குறைக்க நினைப்போர், மின்சார வாகனங்கள் வாங்குகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, கார், மோட்டார் பைக் மட்டுமின்றி, பஸ் போன்ற வாகனங்களையும், மின்சாரத்தால் இயக்கும் நிலை வந்து விட்டது.
மின்சார வாகனங்களின் பேட்டரியை, குறிப்பிட்ட இடைவெளியில், 'சார்ஜிங்' செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சில நிறுவனங்கள், பொது இடங்களில், 'சார்ஜிங்' வசதியை ஏற்படுத்த முன்வந்தன.
எனினும், இதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதியை ஏற்படுத்துவது கட்டாயம் என, கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்காக கட்டட விதிகளை திருத்தும்படி, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், தமிழக அரசு பொது கட்டட விதிகளில் திருத்தங்கள் செய்துள்ளது.
தமிழகத்தில் எட்டு வீடுகள் உள்ள மற்றும் 8,072 சதுர அடிக்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கு, 'சார்ஜிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில், வீடுகளின் எண்ணிக்கை, 50க்கும் மேல் இருந்தால், அந்த வளாகத்தில், வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு, விரைவாக, 'சார்ஜிங்' செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
தொழில், வணிக நிறுவன கட்டடங்களின் பரப்பளவு, 3,229 சதுர அடிக்கு மேல் இருந்தால், அங்கு வாகன நிறுத்துமிடத்தில், 10 சதவீத இடத்தை சார்ஜிங் வசதிக்காக ஒதுக்க வேண்டும்.
இந்த இடங்களில் விரைவாக சார்ஜிங் செய்வதற்கு, உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பொது கட்டட விதிகளில் குறிப்பிட்ட சில பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விபரம் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

