மின் வழித்தடத்திற்கு இடம் தந்தால் மும்மடங்கு இழப்பீடு: அரசு அறிவிப்பு
மின் வழித்தடத்திற்கு இடம் தந்தால் மும்மடங்கு இழப்பீடு: அரசு அறிவிப்பு
ADDED : நவ 01, 2025 08:59 PM
சென்னை: அதிக திறன் உடைய மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க நிலம் தருவோருக்கான இழப்பீட்டை, மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம், மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல்வேறு இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
விவசாயிகள், தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த மின் கோபுர வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
நிலத்தின் மேல் மின் வழித்தடம் அமைக்கப்படும் போது, அதன் உரிமையாளருக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 100 சதவீதமும், மேலே செல்லும் கம்பி வழித்தடத்துக்கு, 20 சதவீதமும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், மின் கோபுர வழித்தடம் அமைக்க, அதிக இழப்பீடு கேட்டு சிலர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மின் வழித்தடங்களை அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை ஏற்காத பட்சத்தில், மாவட்ட வருவாய் துறையினர் பேச்சு நடத்தி, அவர்கள் கேட்கும் தொகை வழங்கப்படுகிறது.
தமிழக மின் தேவை அதிகரித்து வரும் சூழலில், அதற்கு ஏற்ப புதிய மின் கோபுர வழித்தட திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது.
மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனம், மின் வழித்தடங்கள் அமைக்க, வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் இழப்பீடு வழங்கு கிறது. இதனால், அதன் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றன.
எனவே, புதிய மின் வழித்தடங்களை விரைவாக அமைக்க, தற்போது வழங் கப்படும் இழப்பீட்டை விட மும்மடங்கு வரை உயர்த்தி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

