3ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆலோசனை நிறுவன தேர்வுக்கு அரசு ஒப்புதல்
3ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆலோசனை நிறுவன தேர்வுக்கு அரசு ஒப்புதல்
ADDED : அக் 01, 2025 08:04 AM

சென்னை : மூன்றாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீராதாரங்களில், 'புளோரைடு' உப்புதன்மை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது. அதை குடிக்கும் பொதுமக்கள் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி வந்தனர்.
வினியோகம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டு கட்டமாக ஒனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை, தமிழ்நாடு குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, 34.7 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுக்கு குடிநீர் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, காவிரி நீரை ஆதாரமாக கொண்டு, மூன்றாம் கட்டமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இத்திட்டத்தின்படி, ஒகேனக்கல்லில் இருந்து யானை பள்ளம், கனவாய் நீரேற்று நிலையங்கள் வழியாக, 20.2 கி.மீ., தொலைவில் உள்ள பருவதனஹள்ளி கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் கொண்டு வரப்பட உள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், 1,009 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கபட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
அரசாணை இத்திட்டத்திற்கு,8,428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு, 2,283 கோடி ரூபாய், மாநில அரசு மற்றும் தொழில் துறை பங்களிப்பு தொகை, 1,761 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மீதமுள்ள தொகை, ஜப்பான் பன்னாட்டு வங்கியிடம் இருந்து கடனுதவியாக பெறப்பட உள்ளது.
இதற்கு, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 11 தொகுப்புகளாக, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு திட்ட மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய, கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.
மூன்றாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, ஓசூர் மாநகராட்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி நகராட்சிகள் , 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 38.8 லட்சம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.