களப்பணியில் 25,000 பணியாளர்கள் ஆறு மாவட்டங்களில் அரசு ஏற்பாடு
களப்பணியில் 25,000 பணியாளர்கள் ஆறு மாவட்டங்களில் அரசு ஏற்பாடு
ADDED : நவ 30, 2024 10:06 PM
சென்னை:“ஆறு மாவட்டங்களில், 25,000 பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்,” என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
சென்னை மற்றும் மாவட்டங்களில், மண்டல அலுவலர்கள், அமைச்சர்கள் இணைந்து, மழை நிவாரண பணிகளை மேற்கொண்டுஉள்ளனர்.
மீட்பு நடவடிக்கைக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையினர் - 270 பேர்; மாநில பேரிடர் மீட்பு படையினர் - 270 பேர் தயாராக உள்ளனர்.
மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில், மக்களை மீட்க படகுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும், அரசு தயாராக உள்ளது.
மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க உள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் - 10,000 பேர்; மற்ற ஐந்து மாவட்டங்களில் - 25,000 பேர் களப்பணியில் உள்ளனர். மீட்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒன்று, விழுப்புரத்தில் இரண்டு நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் சமையல் செய்து, வீடுகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரை சாலைகள், முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
மாவட்ட கலெக்டர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று காலை வரை, 4 செ.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை தகவல், 2 கோடி பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. காற்றில் மரம் சாய்ந்தால், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், 'மின் சாதன பழுதுகளை சரிசெய்ய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், செயற்பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 10,000 ஊழியர்கள், 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில், தயார் நிலையில் உள்ளனர்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.