வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு ஏற்பாடு
வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு ஏற்பாடு
ADDED : நவ 06, 2024 11:08 PM
சென்னை:வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்ய, தமிழக மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
மத்திய அரசு, சூரிய சக்தி இலவச மின் திட்டத்தின் கீழ் வீடுகளில், ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும்; 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாயும் மானியம் வழங்குகிறது.
அதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும், 18,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் மானியத்தால் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பலருக்கு, எந்த நிறுவனம் வாயிலாக, மின் நிலையம் அமைப்பது என்பது தெரிவதில்லை. அந்த நிறுவனங்கள் பற்றிய விபரமும் கிடைப்பதில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சூரியசக்தி மின் நிலையம் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு, மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. மின் வாரியத்தின் இணையதளத்தில், அந்த நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அந்த விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் வாயிலாக, வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் எளிதாக கிடைக்கும் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.