உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: தோட்டக்கலை துறை சங்கங்களை உடைக்க அரசு முயற்சி
உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: தோட்டக்கலை துறை சங்கங்களை உடைக்க அரசு முயற்சி
ADDED : டிச 22, 2025 12:42 AM
சென்னை: 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் - 2.0'ஐ செயல்படுத்துவதற்கு, தோட்டக்கலை துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், துறையின் அலுவலர்கள் சங்கங்களை உடைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
வேளாண் துறையின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.
வேளாண் துறை வாயிலாக உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட சாகுபடிக்கு தேவையான உதவிகளும், தோட்டக்கலை துறை வாயிலாக காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மலைப்பயிர்கள் உள்ளிட்ட சாகுபடிக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.
அரசாணை வேளாண் இயந்திரங்களை மானிய விலையிலும், வாடகைக்கும், வேளாண் பொறியியல் துறை வழங்கி வருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்வதற்கான உதவிகளை, வேளாண் வணிகப்பிரிவு செய்து வருகிறது.
இதற்கென தனித்தனியாக கிராம அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் - 2.0' என்ற திட்டத்தை செயல்படுத்த வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, நான்கு கிராமங்களுக்கு ஒரு அலுவலரை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
அனைத்து துறை தொடர்பான உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகளை இவர்கள் வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் படிப்பு படித்த அலுவலர்கள், தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு உதவுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது.
முற்றுகை போராட்டம் தோட்டக்கலை அலுவலர்களின் பதவி உயர்வு, ஊதிய பலன்கள், அடிப்படை பணி உரிமைகள் பாதிக்கப்படும் என்ற புகாரும் எழுந்துள்ளது.
அதனால், இத்திட்டத்திற்கு தோட்டக்கலை துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்த உள்ளதாகவும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், உச்சகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து, தோட்டக்கலை துறை சங்கங்களை உடைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மறைமுகமாக துவக்கிஉள்ளது.
இந்தப் பிரச்னையால், வேளாண் துறையில் உச்சகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

