தாக்குதலில் படுகாயமடைந்த அரசு பஸ் கண்டக்டர் மரணம்; உடலை பெறாமல் உறவினர்கள் மறியல்
தாக்குதலில் படுகாயமடைந்த அரசு பஸ் கண்டக்டர் மரணம்; உடலை பெறாமல் உறவினர்கள் மறியல்
ADDED : ஜூன் 01, 2025 05:51 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கணபதி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 47; அரசு பஸ் கண்டக்டர். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
மே 22ம் தேதி இரவு பணி முடித்து, திருவையாறு அருகே உள்ள செம்மங்குடியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக தன் தம்பி மகள் தன்ஷிகாவை மணிகண்டன் அழைத்துச் சென்றபோது, மாதா கோவில் தெருவில் திருவிழாவுக்காக, முருகேசன் மனைவி ஜெனித்தாமேரி என்பவர் வீட்டின் வாசல்முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது, டூ-வீலர் மோதியது. இதில், ஜெனித்தாமேரி லேசாக காயமடைந்தார்.
உடனே, அங்கிருந்த ஐந்து பேர், மணிகண்டனை சரமாரியாக தாக்கி, அவரது தலையை சாலையில் மோதியதில், மணிகண்டன் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு, தன்ஷிகா உதவியுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருவையாறு போலீசார் மே 27ல், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மணிகண்டனை தாக்கியவர்கள் மீது புகார் அளித்து ஒரு வாரமாகியும் கைது செய்யாத போலீசாரை கண்டித்து, மணிகண்டன் மனைவி அகிலாண்டேஸ்வரி, அவரது உறவினர்கள் நேற்று திருவையாறு கடை வீதியில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை மணிகண்டன் உடலை வாங்க மாட்டோம் என, கோஷமிட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, மணிகண்டன் மரணத்திற்கு காரணமான நபர்களை கைது செய்வோம் என உறுதி அளித்தபின், மறியலை கைவிட்டனர்.