ADDED : ஏப் 23, 2026 03:58 AM

சென்னை, ஏப். 23-
அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பஸ்சில், வேலுார் அரசு போக்குவரத்துக் கழகம் என 'ஸ்டிக்கர்' இருந்தது, குழப்பத்தை ஏற்படுத்தியது.
தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ், விரைவு போக்கு வரத்துக் கழகம், சென்னை, கும்பகோணம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில், தினமும் இயக்கப்படும், 20,200 பஸ்களில், சராசரியாக 1.80 கோடி பேர், பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, வேலுார் அரசு போக்குவரத்துக் கழகம் என, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட, புதிய பஸ்சின் புகைப்படம், சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. அதைத் தொடர்ந்து, வேலுார் அரசு போக்குவரத்துக் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதா என, பலரும் கேள்வி எழுப்பினர்.
தேர்தல் நேரம் என்பதால், இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவ்வாறு எதுவும் உருவாக்கப்படவில்லை என, அதிகாரிகள் பதில் அளித்தனர்.
இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தனியார் பஸ் தயாரிப்பு நிறுவனம், முதல் கட்டமாக ஆறு பேருந்துகளை தயாரித்து, வேலுார் மண்டலத்துக்கு அனுப்பியது.
அந்த பஸ்கள் பதிவு எண் பெற்று, முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. ஆனால், புதிய பஸ்சில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் என்பதற்கு பதிலாக, வேலுார் அரசு போக்குவரத்துக் கழகம் என, தவறாக 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
இதை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்; இது எங்கள் கவனத்துக்கு வந்தவுடன், உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டது. இதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
