அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்த முடிவு: மே முதல் அமலாகிறது
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்த முடிவு: மே முதல் அமலாகிறது
ADDED : ஏப் 01, 2025 06:36 AM

மதுரை: தமிழகத்தில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் நடைமுறை, அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
தற்போது தொடக்க கல்விக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் செலுத்துகின்றனர். ஆனால், அரசு உயர், மேல்நிலைப் பள்ளி களுக்கான கட்டணத்தை, அந்தந்த தலைமையாசிரியர்கள் செலுத்துகின்றனர்.
பள்ளிகளுக்கென ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும் சில்லரை செலவினத்தில் இருந்து இக்கட்டணத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த சில்லரை செலவினம் முறையாக வழங்கப்படுவது இல்லை. அதனால், தலைமையாசிரியர்கள் சொந்த பணத்தில் இருந்து தான் பெரும்பாலும் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது, ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறை போன்ற திட்டங்களால், இக்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப சில்லரை செலவினம் ஒதுக்கப்படாததால், தலைமையாசிரியர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. தொடக்கப் பள்ளிகள் போல, இக்கட்டணத்தையும் அரசே நேரடியாக மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் உள்ளிட்டவை வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், 9,000 உயர், மேல்நிலைப் பள்ளிகளின் மின் இணைப்பு எண்கள், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில், தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக மின்கட்டணம் செலுத்தப்பட்டது. இது, மே, 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை கூறுகையில், ''சங்கம் சார்பில், இக்கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக, மே மாதம் முதல் அரசே நேரடியாக கட்டணம் செலுத்தும் என்பது வரவேற்கத்தக்கது.
கடைசியாக செலுத்திய மின்கட்டண தொகையை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.