ADDED : ஆக 14, 2025 03:14 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரியில் பணிபுரிந்த டாக்டர் பாபு சங்கரை டிஸ்மிஸ் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டை சேர்ந்தவர் பாலசுந்தரராஜன். கடந்த ஆண்டு ஆக., 26-ல் டூ - வீலரில் திருநெல்வேலி நோக்கி சென்ற போது பின்னால் வந்த கார் மோதி படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்தியவர் அரசு மருத்துவ துறையில் பணியாற்றுபவர் என்பதால், அவரை காப்பாற்றும் நோக்கில் டூ - வீலர் ஓட்டிய பாலசுந்தரராஜன் மது அருந்தியிருந்தார் என, அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் பாபு சங்கர் போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பாலசுந்தரராஜன் புகார் அனுப்பியிருந்தார்.
அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பாலசுந்தரராஜன் மது அருந்தவில்லை என்பது தெரியவந்தது. அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போது உள்ள குற்றச்சாட்டு களின் அடிப்படையில் பாபுசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை டிஸ்மிஸ் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.