கலைஞர் பல்கலை மசோதா கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு
கலைஞர் பல்கலை மசோதா கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு
UPDATED : அக் 05, 2025 01:16 AM
ADDED : அக் 04, 2025 10:42 PM

சென்னை:கும்பகோணம் கலைஞர் பல்கலை சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் ரவியின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலையை பிரித்து, புதிதாக கும்பகோணத்தில் கலைஞர் பல்கலையை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, கடந்த ஏப்ரல், 29ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில், 'கலைஞர் பல்கலை வேந்தராக தமிழக முதல்வரும், இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சரும் இருப்பர். வேந்தரின் முன் அனுமதியின்றி பட்டங்கள் வழங்க முடியாது. தேடல் குழு தேர்வு செய்யும் மூவர் பட்டியலில் இருந்து துணை வேந்தரை, வேந்தர் நியமிப்பார்' என்று கூறப்பட்டிருந்தது.
'துணை வேந்தர் தேடல் குழுவில், வேந்தரின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மை செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலை துணை வேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்' என்றும், மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இந்த மசோதாவை, கடந்த ஆகஸ்ட், 5ம் தேதி, ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ரவி.
இந்நிலையில், கவர்னரின் முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், 'கலைஞர் பல்கலை சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது, சட்டசபை முடிவுக்கு எதிரானது. எனவே, இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.