கனிம விதிகளில் மாற்றம் செய்ய அரசு சார்பில் குழு அமைப்பு
கனிம விதிகளில் மாற்றம் செய்ய அரசு சார்பில் குழு அமைப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:22 PM
சென்னை:ஆற்று மணல், கருங்கல் உள்ளிட்ட சிறு கனிமங்களுக்கான, சலுகை விதிகளை மாற்றி அமைப்பதற்கு, பரிந்துரைகள் வழங்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.
கனிமவளத்துறை கீழ், மணல், கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றை எடுப்பதற்கான சலுகை விதிகள், 1959ல் உருவாக்கப்பட்டன.
கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான அளவு, அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமை கட்டணம் உள்ளிட்ட விபரங்கள், அந்த விதிகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நிலத்தின் வரியை, அதில் கிடைக்கும் கனிமத்தின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கும் நடைமுறை, சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதனால், சிறு கனிமங்கள் எடுப்பதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
இதற்கு தீர்வு காணவும், இதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், அடிப்படை விதிகளில் திருத்தம் செய்ய, அரசு முடிவு எடுத்துள்ளது.
கனிமவளத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 1959ல் உருவாக்கப்பட்ட சிறு கனிமங்கள் சலுகைகள் விதிகளில், 2015, 2021ம் ஆண்டுகளில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் உள்ள சில விதிகள், 1957ம் ஆண்டு சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்கு படுத்துதல் சட்டத்துக்கு, முரணாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கனிமங்களை எடுப்போர், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமைத் தொகை நிர்ணயிக்கும் வழிமுறைகளையும் மாற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக, கனிம வளத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு, வரி விதிக்கும் வழிமுறையை மாற்ற வேண்டியுள்ளது.
சுரங்கத் துறையில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, புதிய விதிகளை சேர்க்க வேண்டியுள்ளது. இதற்காக தனித்தனி திருத்தங்கள் செய்வது, போதுமானதாக இல்லை. எனவே ஒட்டுமொத்தமாக இந்த விதிகளை மறு ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு பரிந்துரை அடிப்படையில், சிறு கனிமங்கள் சலுகை விதிகள் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, தமிழக மணல் லாரிகள், எம்.சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளனத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம் கூறியதாவது:
ஆற்று மணல், கருங்கல், கிராவல், சவுடு மண் ஆகியவற்றை எடுப்பதில், அதிகபட்ச முறைகேடுகள் நடக்கின்றன. அரசு அமல்படுத்தியுள்ள விதிகளை, தவறாக பயன்படுத்தியே, இந்த முறைகேடுகள் நடக்கின்றன. இவற்றை தடுப்பதுடன், அதில் ஈடுபடுவோரை, கடுமையாக தண்டிக்கும் வகையில், விதிகளை திருத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.