மொட்டை மாடி சூரிய மின்சாரத்தையும் வாரியத்துக்கு விற்க அரசு பச்சைக்கொடி
மொட்டை மாடி சூரிய மின்சாரத்தையும் வாரியத்துக்கு விற்க அரசு பச்சைக்கொடி
UPDATED : மே 23, 2025 04:18 AM
ADDED : மே 23, 2025 12:31 AM

சென்னை:காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற் கூரை சூரியசக்தி மின்சாரமும் சேர்க்கப்பட உள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக 16,000 மெகா வாட்டாக உள்ளது. இதை, அனல், எரிவாயு, நீர், காற்றாலை உள்ளிட்ட பல வகை மின்சாரம் வாயிலாக மின் வாரியம் பூர்த்தி செய்கிறது.
கருத்து கேட்பு
இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு குறிப்பிட்ட அளவில் கட்டாயம் இருக்க வேண்டும். இதை, ஆர்.பி.ஓ., என குறிப்பிடுகின்றனர். அதாவது, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் கொள்முதல் அளவு.
இதில் காற்றாலை, நீர் மற்றும் சூரியசக்தியை உள்ளடக்கிய மற்ற வகை மின்சாரம் மட்டுமே இருந்தது. மத்திய மின் துறை அறிவுறுத்தலின்படி, தற்போது முதல் முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சேர்க்கப்பட உள்ளது.
அதன்படி, நடப்பு நிதியாண்டின் மொத்த மின் கொள்முதலில், மேற்கூரை சூரியசக்தி மின்சார பங்கு 2.10 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும். இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2029 - 30ல், 4.50 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையம், பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டுள்ளது. வரும் ஜூன் 6ம் தேதி வரை மக்களும், தொழில் துறையினரும் கருத்து தெரிவிக்கலாம்.
செலவு குறையும்
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் நிறுவனங்கள், அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையத்தை நிலத்தில் அமைக்கின்றன. இது தவிர, வீடு, நிறுவனங்கள், தங்கள் கட்டடங்களின்மேல் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கின்றன.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம். இதை ஊக்குவிக்கவே, தற்போது மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் சேர்க்கப்பட்டு உள்ளது.
இதை அமைப்பதால், தனி நபரின் மின் கட்டண செலவு குறையும். மேலும், மின் வாரியத்தின் மின் கொள்முதல் செலவும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.