பிளாஸ்டிக் தடைக்கு பின் ரூ.21 கோடி அபராதம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
பிளாஸ்டிக் தடைக்கு பின் ரூ.21 கோடி அபராதம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : ஜூலை 20, 2025 06:50 AM
சென்னை : பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த பின், தமிழக முழுதும், 21 கோடி, 47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, ஊட்டியில் கடந்த மே மாதம் நடந்த நாய் கண்காட்சியில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்,சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, நீலகிரி மாவட்ட நிர்வாக அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், 'கண்காட்சிக்காக நாய்களை அழைத்து வந்த வாகனங்களில், 'பெட்' பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதை கண்டறிந்ததும், அதை பயன்படுத்தியவர்களுக்கு, தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது' என, கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், வழக்கறிஞர் பி.என்.சுசீந்திரன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, கடந்த 2019ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் 17 லட்சத்து, 23 ஆயிரத்து, 567 சோதனைகள் நடத்தப்பட்டன.
சோதனையில், 2,586 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 21 கோடி, 47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த, 261 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இருந்து, பறிமுதல் செய்யப்பட்ட, 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எப்படி அப்புறப்படுத்தப்படும் என்பது குறித்தும், மூடப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்தும் விரிவான அறிக்கையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.