எம்.ஆர்.பாளையம் யானைகளை முகாம் மாற்றும் திட்டம் இல்லை ஐகோர்ட்டில் அரசு தகவல்
எம்.ஆர்.பாளையம் யானைகளை முகாம் மாற்றும் திட்டம் இல்லை ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : ஜன 03, 2025 11:17 PM
சென்னை:'திருச்சி, எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை, புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனு:
நோய்வாய்ப்பட்ட, ஓய்வு பெற்ற யானைகளை பராமரிக்க, 2019ல் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் துவக்கப்பட்டது.
இந்த மையத்தில், தற்போது உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டது என கூறி, உரிமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்த யானைகளை கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்த மையத்தில், தற்போது முழு நேர வனவிலங்கு மருத்துவ நிபுணர்கள் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால், அங்கிருக்கும் யானைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அங்கு அடுத்தடுத்து யானைகள் இறந்து வருவதால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில், எஸ்.ஓ.பி., எனப்படும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'எம்.ஆர்.பாளையம் மையத்தில் உள்ள யானைகளை, மத்திய அரசின் அனுமதியின்றி, கோவை சாடிவயல் முகாமுக்கு மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு யானைகளுக்கான மேற்கூறை, பணியாளர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட இதர வசதிகளுக்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன' என்றார்.
அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, ''எம்.ஆர்.பாளையம் மையத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
''அதற்காக, எட்டு கோடி ரூபாய் செலவில் சாடிவயலில் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இருப்பினும், எம்.ஆர்.பாளையம் மையத்தில் பராமரிக்கப்படும் யானைகளை, சாடிவயல் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை. மத்திய அரசின் அனுமதி பெறாமல் யானைகள் மாற்றப்பட மாட்டாது,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், சாடிவயல் யானைகள் முகாமுக்கு பெறப்பட்ட அனுமதி குறித்தும், எம்.ஆர்.பாளையம் மையத்தில் உள்ள யானைகள் உடல்நிலை குறித்தும், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையை பிப்., 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.