ADDED : மே 28, 2026 02:14 AM
சென்னை: 'அரசு துறைகளுக்கும், திறந்தவெளி சந்தையிலும் சிமென்ட் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசின் சிமென்ட் நிறுவன அதிகாரிகளை, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், 'டான்செம்' எனப்படும், தமிழக சிமென்ட் நிறுவனத்தின் பணிகள் குறித்து, சென்னையில் அமைச்சர் கீர்த்தனா நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதில், தொழில் துறை செயலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:
அரசு துறைகளில் நடக்கும் கட்டுமான பணிகள் குறித்த விபரங்களை சேகரித்து, சிமென்ட் தேவையை அறிந்து, அதற்கு ஏற்றபடி, 'டான்செம்' நிறுவனம் சந்தைப்படுத்துதல் முறைகளை பின்பற்ற வேண்டும்.
திறந்தவெளி சந்தையிலும், அரசு துறைகளுக்கும், 'சிமென்ட்' விற்பனையை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிய முதலீடுகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கைகளை, வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
