வாடகை கட்டடத்தில் அரசு மாதிரி பள்ளிகள்: ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் செலவு
வாடகை கட்டடத்தில் அரசு மாதிரி பள்ளிகள்: ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் செலவு
UPDATED : அக் 05, 2025 02:57 AM
ADDED : அக் 04, 2025 06:46 PM

நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் அரசு மாதிரி பள்ளிகள், வாடகை கட்டடத்தில் போதிய வசதியின்றி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியாக, 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கான போட்டி தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் வகையில், 2021ல் சென்னையில் இரண்டு மற்றும் மாவட்டத்திற்கு தலா ஒன்று என, 39 மாதிரி பள்ளி களை அரசு துவக்கியது.
மாவட்ட அளவில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான அதிக மதிப்பெண் பெறும், 100 முதல் 120 மாணவர்கள் இதில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க, 19 முதுகலை பட்டதாரி, 10 பட்டதாரி, உடற்கல்வி, கலை பயிற்சி ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளியிலேயே தங்கி படிக்க விடுதி, தனி நுாலகம், ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் உள்ளன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், 70 கோடி ரூபாய் செலவில், அரசு மாதிரி பள்ளிக்கு மாணவர் விடுதி, நீச்சல் குளம், விளையாட்டு திடல், ஸ்மார்ட் வகுப்பறை கள் கட்டித்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டியுள்ளனர்.
திட்டம் துவங்கி நான்கு ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும், 34 பள்ளிகளுக்கு தலா 2.75 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை மாத வாடகை கொடுத்து தனியார் கல்லுாரிகள், பள்ளிகளில் செயல்படுகின்றன.
கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ - மாணவியர் மருத்துவம் உள்ளிட்ட உய ர் கல்விக்கு செல்கின்றனர்.
தமிழக பட்ஜெட் மட்டு மின்றி, மத்திய அரசும் பல்வேறு கல்வி திட்டங்களுக்கு நிதி வழங்குகிறது. இதை முறையாக பயன்படுத்தி அரசு மாதிரி பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -