சென்னையை அடுத்து கோவை, மதுரையில் மின்சார பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை
சென்னையை அடுத்து கோவை, மதுரையில் மின்சார பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை
ADDED : ஆக 30, 2025 02:36 AM

சென்னை : 'சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில், தனியார் பங்களிப்புடன் மின்சார பஸ்களை இயக்க, ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன' என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பங்களிப்புடன், சுற்றுச்சூழல் மாசுவை குறைக்க, முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
திட்டம் தற்போது, 255 மின்சார பஸ்கள், தனியார் பங்களிப்புடன் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களால், டீசல் உள்ளிட்ட இதர செலவுகள், 40 சதவீதம் குறைந்துள்ளன.
அடுத்த கட்டமாக, கோவை மற்றும் மதுரையில், மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களில், டீசல் பஸ் களுக்கு மாற்றாக, மின்சார பஸ்கள், சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட எரிவாயுவில் இயங்கும் பஸ்கள் பயன்பாட்டை அதிகரிக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
கூடுதல் பஸ் வசதி இவற்றால், சுற்றுச் சூழல் மாசு குறைவதுடன், டீசல் செலவும் குறைக்கப்படுகிறது. தனியார் பங்களிப்போடு, மின்சார பஸ்களை இயக்குவதால், நிர்வாக செலவு, 40 சத வீதம் குறைகிறது.
இதுபோன்ற நிர்வாக மாற்றத்தால், பயணியருக்கு எந்த இடையூறுமின்றி, கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த முடியும்.
பஸ் கட்டண உயர்வின்றி, பயணியருக்கு போதிய பஸ்களை இயக்குவதில், அரசு போக்குவரத்து கழகங்கள், தொடர்ந்து சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றன.
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவையில், தலா, 100 மின்சார பஸ்களை, தனியார் பங்களிப்போடு இயக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எந்தெந்த பணிமனையில், 'சார்ஜிங்' மையம் அமைப்பது, எந்தெந்த வழித்தடங்களில் மின்சார பஸ்கள் இயக்குவது என்ற தகவல் சேகரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய, விரைவில் டெண்டர் வெளியிடப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.