மனுக்கள் பதிவேடு தயாரிக்க அரசு அலுவலகங்களுக்கு உத்தரவு
மனுக்கள் பதிவேடு தயாரிக்க அரசு அலுவலகங்களுக்கு உத்தரவு
ADDED : ஆக 09, 2025 02:26 AM
சென்னை,:அரசு அலுவலகங்களில், பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் பதிவேடுகளை தயாரிக்க, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோருக்கு, அவர் பிறப்பித்து உள்ள உத்தரவு:
அரசு அலுவலகங்களில் நேரடியாகவும், இ -- மெயில் வாயிலாகவும் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஏற்கனவே வழி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை வழங்க வேண்டும். அத்துடன், மனுக்களுக்கு தீர்வு காண்பதில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இதை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
எனவே, அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்களை கையாளும் போது, உரிய நடைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் மனுக்களை பெற்று, அவற்றை மனு பதிவேடு வாயிலாக பராமரிக்க வேண்டும்.
பதிவேட்டில் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். பதிவேட்டை மாத இறுதியில், அலுவலகத்தின் தலைமை அலுவலர் ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
பதிவேட்டில் வரிசை எண், கோப்பு எண், மனுதாரரின் பெயர் மற்றும் விபரங்கள், மனு பெறப்பட்ட தேதி, மனு தீர்வு செய்யப்பட்ட தேதி, குறிப்பு போன்ற விபரங்கள் இடம்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.