UPDATED : ஜூலை 11, 2025 01:13 AM
ADDED : ஜூலை 10, 2025 10:33 PM

சென்னை:'தினமலர்' நாளிதழ் செய்தியை தொடர்ந்து, ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்திற்கான திட்ட இலக்கை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்' என்ற புதிய திட்டம் துவக்கப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், வீட்டு தோட்டங்களில் காய்கறி செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதை தொகுப்பு; பப்பாளி, கொய்யா, எலுமிச்சை அடங்கிய 9 லட்சம் பழச்செடிகள் தொகுப்பு; புரதச்சத்து நிறைந்த துவரை, காராமணி அடங்கிய 1 லட்சம் பருப்பு வகை தொகுப்பை, பொதுமக் களுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் 4ம் தேதி துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், ஐந்து பயனாளிகளுக்கு தொகுப்புகளை வழங்கினார்.
மாநிலம் முழுதும், தோட்டக்கலை அலுவலகங்கள், பண்ணைகள் மற்றும் பூங்காக்களில், பழச்செடிகள், காய்கறி விதை தொகுப்பு வழங்கும் பணிகள், அதே நாளில் துவங்கப்பட்டன.
ஆனால், திடீரென அடுத்த நாள் முதல் வினியோகம் நிறுத்தப் பட்டது. விதை தொகுப்புகளை வாங்க, ஆர்வமுடன் சென்ற பொதுமக்கள், ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் 9ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி, தோட்டக் கலைத் துறை இயக்குநர் குமரவேல் பாண்டி யன் ஆகியோரிடம், அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த, அனைத்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வேளாண் துறை செயலர் ஆலோசனை நடத்தினார்.
திட்டத்திற்கான இடுபொருட்களை, வரும் 31ம் தேதிக்குள் கொடுத்து முடித்து, பயனாளிகள் பட்டியலை தன் அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார்.