'ரோடு ஷோ' அனுமதிக்கான அரசின் விதிமுறைகள் தேர்வு எழுதுவது போல உள்ளது: ஐகோர்ட் அதிருப்தி
'ரோடு ஷோ' அனுமதிக்கான அரசின் விதிமுறைகள் தேர்வு எழுதுவது போல உள்ளது: ஐகோர்ட் அதிருப்தி
ADDED : நவ 27, 2025 10:10 PM

சென்னை : 'தமிழக அரசின் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை பார்க்கும் போது, 'ரோடு ஷோ'க்களுக்கு அனுமதி பெறுவது என்பது, தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கரூரில், செப்., 27ல் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஏராளமானோர் கூடுவதை கட்டுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின், 'ரோடு ஷோ' மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி, துாத்துக்குடியை சேர்ந்த திருகுமரன், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் த.வெ.க., சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் வரைவு, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, அ.தி.மு.க.,- த.வெ.க., மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், 'நிலையான வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக, எங்கள் கட்சிகள் சார்பில் ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. ஆனால், விதிமுறைகளை வகுக்கும் முன், எங்களை அரசு கலந்து ஆலோசிக்கவில்லை' என்று, தெரிவிக்கப்பட்டது.
த.வெ.க., தரப்பில், 'அனுமதிக்கப்பட்ட இடங்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த இடங்களில் எத்தனை பேர் நிற்கலாம், எத்தனை பேர் அமரலாம் என்ற விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், 'அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பிறகே, இந்த வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்களின் விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன' என்று, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை பார்க்கும் போது, 'ரோடு ஷோ'க்களுக்கு அனுமதி பெறுவது என்பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல உள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா, ஏற்கப்பட்டதா என, முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவும், எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது என, கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

