அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளைகள் யாருக்கும் தத்து கொடுக்க மாட்டோம் * பாலகிருஷ்ணன் புகாருக்கு அமைச்சர் வழக்கமான பதில்
அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளைகள் யாருக்கும் தத்து கொடுக்க மாட்டோம் * பாலகிருஷ்ணன் புகாருக்கு அமைச்சர் வழக்கமான பதில்
ADDED : ஜன 02, 2025 08:16 PM
சென்னை:''எதற்காககவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், அமைச்சர் மகேஷ் தலைமையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி துறை செயலர் மதுமதி, பாடநுால் கழக மேலாண் இயக்குனர் சங்கர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஸ்ரீவெங்கடபிரியா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, பள்ளிக்கல்வி சிறப்பு செயலர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், அமைச்சர் அளித்த பேட்டி:
கடந்தாண்டு பள்ளிக்கல்வி துறையின் மானிய கோரிக்கையின் போது, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழாவில், 500 அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகள் தங்களின் சமூக பங்களிப்பு நிதியின் வாயிலாக தத்தெடுக்கும் என, நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. தனியார் பள்ளி சங்கத்தினர், 'அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி தருகிறோம்' என்றனர்; அதற்கு நன்றி கூறினேன்; அவ்வளவு தான்.
அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளை. அவர்களை நாங்கள் வளர்த்து கொள்வோம். யாரிடமும் தத்து கொடுக்கவோ, தாரை வார்க்கவோ அவசியமில்லை. அரசு பள்ளிகளை தரம் உயர்த்த, 'நம்ம ஊரு நம்ம பள்ளி' என்ற அறக்கட்டளையை, முதல்வர் தன் சொந்த நிதியில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி துவக்கி வைத்தார். இதுவரை, 504 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
'நம் கொள்கையை விட்டுக்கொடுத்து, கிடைக்கும் பணத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை' என கூறியவர் நம் முதல்வர். மத்திய அரசு, 'சமக்ர சிக்சா' நிதியாக தர வேண்டிய, 500 கோடி ரூபாயை தராத நிலையில், 32,000 ஆசிரியர்கள், பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு தான் வழங்கி, மாணவர்கள் கல்வி தடைபடக்கூடாது என, நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே, கட்டாய கல்வி உரிமைக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை தராததால், தனியார் பள்ளிகளுக்கான நிதி நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, அவர்களின், 60 சதவீத நிதி பங்களிப்பையும் கணக்கிட்டுதான், 'ரோபோட்டிக்ஸ்' உள்ளிட்ட கல்வி திட்டங்களை வடிவமைத்தோம். அவற்றை செயல்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் தான், மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்றினால், நம் பள்ளிகளை, நம் பிள்ளைகளை நாமே வளர்த்து முன்னேற்றுவோம் என சொல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.