UPDATED : ஜன 11, 2024 06:44 PM
ADDED : ஜன 05, 2024 11:38 PM

சென்னை: பஸ் ஊழியர் ஸ்டிரைக்கை முறியடிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சி செய்கிறது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஊதிய உயர்வு, கருணை வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், 9ம் தேதி முதல் ஸ்டிரைக் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இதனால், அரசு பஸ் போக்குவரத்து முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
சமரசம் ஏற்படவில்லை
இது, பண்டிகை காலத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; லோக்சபா தேர்தல் நேரத்தில் அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என்பதால், போராட்ட அறிவிப்பை திரும்ப பெறுவது தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்; அது தோல்வியில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை, தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் எடுத்துச் சொல்லி, போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறவைக்கும் முயற்சியில் அமைச்சரும், அதிகாரிகளும் ஈடுபட்டுஉள்ளனர்.
ஆனால், மூன்று கட்டமாக பேச்சு நடந்தும் சமரசம் ஏற்படவில்லை. நாளை அடுத்த கட்ட பேச்சு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.''தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், நிறைய நிதி தேவைப்படும். எனவே, நிதி அமைச்சகத்துடன் பேசி முடிவு தெரிவிக்கப்படும்,” என அமைச்சர் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க செயலர் சவுந்தரராஜன் கூறியதாவது: ஆறு அம்ச கோரிக்கைகள் குறித்து எடுத்து கூறினோம். நான்கு மாத அகவிலைப்படி நிலுவையில் இருக்கிறது. அதை பொங்கலுக்கு முன் வழங்க வேண்டும்.
எச்சரிக்கை
ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வை, இந்த மாதமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டோம். பொங்கல் வரை பொறுத்துக் கொள்ளுமாறு அமைச்சர் கூறினார்.
எட்டு ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஸ்டிரைக் அறிவிப்பில் மாற்றம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், 'யாரும் ஸ்டிரைக்கில் பங்கேற்கக் கூடாது. பொங்கல் முடியும் வரை அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, கட்டாயம் பணிக்கு வர வேண்டும்' என, போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.