தொழில் செய்வோர் தாங்கும் அளவிற்குதான் அரசு வரி விதிக்க வேண்டும்: பழனிசாமி
தொழில் செய்வோர் தாங்கும் அளவிற்குதான் அரசு வரி விதிக்க வேண்டும்: பழனிசாமி
ADDED : ஆக 17, 2025 02:24 AM
திருவண்ணாமலை'''தொழில் செய்பவர்கள் தாங்கும் அளவிற்குதான் அரசு வரி விதிக்க வேண்டும். ஆனால், இன்றைய, தி.மு.க., அரசு அப்படி வரி விதிக்கவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பழனிசாமி, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில், நேற்று விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் கலந்துரையாடினார்.
அவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
ஒரு மனிதனுக்கு, எல்லா உறுப்புகளும் இருந்தால்தான் அவன் மனிதனாக கருதப்படுவான். அதுபோல, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்பினரும் ஒன்றாக சேர்ந்தால்தான், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி இருக்கும். ஒவ்வொரு அமைப்பிலும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக தெரிய வருகிறது.
அ.தி.மு.க., அரசு அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பல்வேறு பிரச்னைகளும் தீர்க்கப்படும். எந்த அரசு செயல்பட வேண்டும் என்றாலும், குறிப்பிட்ட வருவாய் ஈட்டாமல் முடியாது. அவற்றின் வாயிலாகத்தான் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.
என்னை சந்திக்கும் தொழில் அமைப்பினர் பலரும், தமிழக அரசு நிமிர முடியாத அளவுக்கு வரியை கூட்டி இம்சிப்பதாக கூறுகின்றனர். இங்கே பேசிய வகையிலும், அதே பிரச்னைகளை பலரும் கூறியுள்ளீர்கள். தொழில் செய்வோர் தாங்கும் அளவிற்குதான், எந்த அரசும் வரி விதிக்க வேண்டும். இதுதான், மக்கள் நல அரசுக்கான அடையாளம். ஆனால், தி.மு.க., அரசு அப்படியல்ல. அ.தி.மு.க., கடந்த காலங்களில் ஆட்சி செய்தபோது, தொழில் செய்வோருக்கு பாதுகாப்பாக இருந்தது. அதே நிலைதான், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தொடரும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும் மிக முக்கியம். அதை சிறப்பாக செயல்படுத்தி விட்டால், எதிர்கால தலைமுறை மிகச் சிறப்பான வாழ்க்கை வாழும். இதை மனதில் வைத்துத்தான், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டோம். ஆனால், கல்வித் துறையிலும் மாற்றங்களை கொண்டு வருவதாக, பல இம்சையான காரியங்களை தமிழக கல்வித் துறையும், அதற்கு பொறுப்பான அமைச்சரும் செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் விரைவில் முடிவு வந்து விடும்.
ஜி.எஸ்.டி., வரியில் மாற்றம் செய்யப்படும் என, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். அதை வாய்ப்பாக பயன்படுத்தி, எந்தெந்த தொழிலை ஜி.எஸ்.டி., வரி விதிப்பு பாதிக்கிறதோ அதையெல்லாம் களைய, பிரதமரிடமும் மத்திய அரசிடமும் பேசுவோம்.
ஒரு அரசு குறிப்பிட்ட அளவுதான் கடன் வாங்க வேண்டும். மத்திய அரசு நிர்ணயித்த அளவுதான் கடன் வாங்க வேண்டும். ஆனால், மாநிலத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே படாமல், தி.மு.க., அரசு கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை திவாலாக்காமல் விட மாட்டார்கள் போல.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.