கம்யூ., தொழிற்சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறைந்தபட்ச சம்பள விவகாரத்தில் அரசு மவுனம்
கம்யூ., தொழிற்சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறைந்தபட்ச சம்பள விவகாரத்தில் அரசு மவுனம்
ADDED : ஜன 04, 2025 02:48 AM
திருப்பூர்:தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில், துாய்மைப்பணி, 'அவுட்சோர்சிங்' முறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
துாய்மைப் பணியாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி வழங்குவது தொடர்பாக, 2017ல் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, மாநகராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர், கொசு ஒழிப்பு ஊழியர்களுக்கு, தினமும், 725 ரூபாய், குடிநீர் பணியாளர், டிரைவர்களுக்கு, 763 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
அதுபோல நகராட்சிகளில், 610 ரூபாய், குடிநீர் பணியாளர்கள், டிரைவர்களுக்கு, 687 ரூபாய்; பேரூராட்சிகளில், 533 ரூபாய், குடிநீர் பணியாளர், டிரைவர்களுக்கு, 610 ரூபாய் தினசரி சம்பளம் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில், துாய்மைப் பணியாளர்களுக்கு, மாதம், 11,848 ரூபாய், குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு, 13,848 ரூபாய் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த சம்பளம் பெரும்பாலான இடங்களில் வழங்கப்படாத நிலையில், குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக, கடந்தாண்டு ஜூன் மாதம், மீண்டும் அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளம், அகவிலைப்படி ஆகியவை, 2017ல், பிறப்பித்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதை விட மிகக்குறைவு என்பதை சுட்டிக்காட்டி, கூடுதல் சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும் என, திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில், அதன் திருப்பூர் மாவட்ட செயலர் ரங்கராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
கூடுதல் சம்பளம் வழங்க, கடந்தாண்டு, அக்., மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களில் துாய்மைப்பணி மேற்கொள்ளும் தனியார் கான்ட்ராக்ட் நிறுவனங்கள் இதுவரை ஏற்காமல், குறைந்த சம்பளமே வழங்கி வருகின்றன.
இதுகுறித்து, மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் சங்கமான, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் ரங்கராஜ் கூறுகையில், ''குறைந்தபட்ச கூலி வழங்குவது தொடர்பாக, சென்னை ஐகோர்ட் உத்தரவை உள்ளாட்சி நிர்வாகங்கள் பின்பற்றாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வது தொடர்பாக, முதன்மை செயலர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், நோட்டீஸ் வழங்கியுள்ளோம்,'' என்றார்.