நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க அரசு நடவடிக்கை
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க அரசு நடவடிக்கை
ADDED : ஜூன் 23, 2025 04:12 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 19,429 விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நுாற் றாண்டு பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில், 'டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நகர்ப்புறங்களிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிதியில், நடப்பாண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளுக்கு, கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, டென்னிகாய்ட்.
கேரம், கபடி, சிலம்பம், செஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளுக்குரிய உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சிக்கு தேவையான கருவிகள் என, 30 வகையான உபகரணங்கள் அடங்கிய, 19,429 விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விளையாட்டு தொகுப்பின் மீதும், தமிழக அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய லோகோ, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என, டெண்டர் விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.