ADDED : அக் 28, 2024 06:56 AM

சென்னை: 'மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு, இரு முறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதால், அரசு பழிவாங்குகிறதா' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில் நடத்தப்பட்ட, மூன்று என்கவுண்டர்கள் குறித்தும், காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான இருவர், சித்ரவதைக்கு ஆளானது குறித்தும், விசாரணை நடத்திய, மனித உரிமை ஆணைய போலீஸ் டி.எஸ்.பி., சுந்தரேசன், போலீஸ் துறையினருக்கு எதிராக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் தயாரான நிலையில், அக்.10-ம் தேதி, திடீரென டி.எஸ்.பி., மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாநில மனித உரிமை ஆணைய போலீஸ் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இதை அறிந்த, மாநில மனித உரிமை ஆணையத் தலைவர், நீதிபதி மணிக்குமார், தம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, மனித உரிமை ஆணையத்தின் டி.எஸ்.பி.,யாக சுந்தரேசன் நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதை தாங்கிக்கொள்ள முடியாத தமிழக அரசு, அக். 23ம் தேதி, நீதிபதி மணிக்குமார் வீட்டிற்கு அளித்த போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளது. உயர் அதிகாரிகளிடம், இது குறித்து அவர் தகவல் தெரிவித்ததும், மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி மணிக்குமார், அக்.24ம் தேதி, ஆணையத்தின் செயலரான கண்ணனை திருப்பி அனுப்பினார். இது குறித்து, தமிழக அரசின் பொதுத்துறை செயலருக்கு, முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.
தனது ஒப்புதல் இல்லாமல், ஆணையம் தொடர்புடைய எந்த கோப்புகளையும் யாருக்கும் அனுப்பக்கூடாது எனவும், ஆணைய அதிகாரிகளுக்கு மணிக்குமார் ஆணையிட்டார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதி மணிக்குமாரின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர், அங்கு பணியில் இருந்த, நான்கு போலீசாரையும் அழைத்து, நீதிபதிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது எனக் கூறி, வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். இதை அறிந்த நீதிபதி மணிக்குமார், முறையான ஆணை எதுவும் இன்றி, தம் வீட்டின் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீசாரை திருப்பி அனுப்ப முடியாது எனக் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி, போலீஸ் மற்றும் சட்டத்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அதைத் தொடர்ந்து அக்.28ம் தேதி வரை, அவருக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருமுறை பாதுகாப்பை திரும்ப பெற்றதும், அக்.28 வரை மட்டுமே, அவருக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டிருப்பதும் ஏற்க முடியாதவை. நீதிபதி மணிக்குமாருக்கு எந்த இடையூறுமின்றி தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.