'ஆன்லைன்' விளையாட்டுக்கு அரசு நேர கட்டுப்பாடு விதித்தது செல்லும்
'ஆன்லைன்' விளையாட்டுக்கு அரசு நேர கட்டுப்பாடு விதித்தது செல்லும்
ADDED : ஜூன் 03, 2025 11:59 PM
சென்னை:'ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த, ஆதார் இணைப்பு மற்றும் நேரக்கட்டுப்பாடு விதித்து, தமிழக அரசு பிறப்பித்த விதிமுறைகள் செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 'ஆன்லைன்' விளையாட்டுகளை முறைப்படுத்த,  தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022ல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து, கடந்த பிப்., 14ல் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட ஆதார் இணைப்பு கட்டாயம் என்றும், நள்ளிரவு 12:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை விளையாட யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, 'ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ்' நலச்சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
எந்த ஒரு ஆன்லைன் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் வர்த்தகமும், மக்களின் பொது சுகாதாரத்தை பாதிக்கும் போது, அவை ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை.
இத்தகைய ஆன்லைன் சார்ந்த செயல்பாட்டின் தீய விளைவுகள், பொது சுகாதாரத்துடன் நேரடியாக தொடர்பு உடையவை. அவற்றை கட்டுப்படுத்தாவிட்டால், கடுமையான சமூக விளைவுகளை உருவாக்கும்.
இத்தகைய விளையாட்டுகளால், உடல், மனம் மற்றும் நிதி அபாயங்களுக்கு மக்கள் ஆளாகும் போது, அவற்றை பார்த்து, அரசு மவுனம் காக்க முடியாது.
ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை, அரசு முறைப்படுத்தலாம்.
அரசியலமைப்பு சட்டம், தொழில் புரியும் உரிமையை வழங்கி உள்ளது. இருப்பினும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமையால், மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது.
மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை, மாநில அரசுக்கு உள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மீதான உத்வேகம் உள்ளிட்ட பிற அம்சங்களும், நம் அரசியலமைப்பின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள், இன்னும் அமலுக்கு வரவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், மாநில அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில், வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அரசு கொண்டு வந்துள்ள விதிகள், மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில், ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டால், இந்த ஒழுங்குமுறை விதிகள் உடனடி தேவையாகின்றன.
'ரம்மி, போக்கர்' போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகள், பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த, அரசு கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும்.
எனவே, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

