குப்பையை உரமாக்கி வருமானம் பெற அரசு மீண்டும் முயற்சி; வெற்றி சந்தேகம்
குப்பையை உரமாக்கி வருமானம் பெற அரசு மீண்டும் முயற்சி; வெற்றி சந்தேகம்
ADDED : ஜன 03, 2025 11:04 PM
சென்னை:ஊராட்சிகளில் தேங்கும் மட்காத குப்பையை சேகரித்து, வருமானமாக மாற்றுவதற்கு, ஊரக வளர்ச்சி துறை முயற்சி மேற்கொள்ளவுள்ளது.
தமிழகத்தில் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இதில், பல ஊராட்சிகள், நகரப் பகுதிகளுக்கு நெருக்கமாக உள்ளதாலும், பல ஊராட்சிகள் சுற்றுலா தலங்களில் அமைந்துள்ளதாலும், அவற்றில் இரண்டு வகையான குப்பையும் அதிகளவில் தேங்குகிறது.
இவற்றை தரம் பிரித்து, மட்கும் குப்பையில் உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால், பெரிய அளவில் ஊரக வளர்ச்சி துறைக்கு செலவு தான் ஏற்பட்டது. தற்போது, ஊராட்சிகளில் குப்பை தொட்டிகள் வாங்குவதற்கு கூட, அரசு நிதி ஒதுக்கவில்லை.
இதனால், சாலை ஓரங்கள், நீர்நிலைகள், பொது மக்கள் கூடும் இடங்கள் என, பல இடங்களில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மட்காத குப்பையை தரம் பிரித்து, உள்ளாட்சிகளுக்கு வருமானமாக மாற்ற, ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டு உள்ளது.
முந்தைய காலங்களில், நகரப் பகுதிகளில் நடைமுறையில் இருந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, ஊரக வளர்ச்சி துறை முயற்சிகளை துவங்கவுள்ளது. இது வெற்றியை தருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகரப் பகுதிகளில் வீடுகளுக்கு சென்று, குப்பை பெறும் திட்டம் உள்ளது. அதேபோன்று, வாரத்திற்கு இரண்டு முறை ஊரக பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று, பாலித்தீன் உள்ளிட்ட மட்காத குப்பை சேகரிக்கப்படஉள்ளது.
தனித்தனியாக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இவ்வாறு சேகரிக்கப்படும் மட்காத குப்பை, ஒரே இடத்தில் கொட்டப்படும். அது மறுசுழற்சி செய்யப்பட்டு, அதன் வாயிலாக ஊராட்சிகளின் வருமானம் அதிகரிக்கப்படும்.
இதனால், ஊராட்சிகளில் உள்ள பொது மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, இத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

