அரசு - யூனியன் பேச்சு தோல்வி 9ம் தேதி முதல் பஸ்கள் ஓடாது
அரசு - யூனியன் பேச்சு தோல்வி 9ம் தேதி முதல் பஸ்கள் ஓடாது
ADDED : ஜன 03, 2024 11:39 PM

சென்னை:அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சு தோல்வியில் முடிந்ததால், வரும் 9ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், தொழிலாளர் நலத் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில், முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில், அரசு போக்கு வரத்துக் கழகங்களை சேர்ந்த, 24 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடவடிக்கை
நேற்று மாலை 3:30 மணிக்கு துவங்கிய பேச்சு, மாலை 5:00 மணியில் முடிவடைந்தது.
'ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, பொங்கலுக்குப் பின் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என, அமைச்சர் கூறியிருக்கிறார். ஊதிய ஒப்பந்த பேச்சுக்கான குழு அமைத்து, ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசும் அறிவுறுத்தியுள்ளது. ஓய்வூதியர் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது; அதை தீர்க்க அவகாசம் தேவை' என, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தொழிற்சங்கங்கள், 'பல ஆண்டுகளாக, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கு தீர்வு காண மேலும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது.
'இந்த பிரச்னையில் தெளிவாக முடிவெடுக்க முடியாத பட்சத்தில், வேலைநிறுத்தத்தை நோக்கிச் செல்வதை விட வேறு வழியில்லை.
'குறிப்பாக, போக்குவரத்து பணியாளர்களுக்கு 15வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு தேதி, ஓய்வுபெற்ற தொழிலாளர் அகவிலைப்படி உயர்வு தேதியை அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
முடிவு
இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், முத்தரப்பு பேச்சு தோல்வியடைந்தது. தொழிற்சங்க நிர்வாகிகள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வெளியேறினர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:
பொங்கலுக்கு முன் ஓய்வூதியர் பிரச்னைக்காவது தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைக்கு கூட, நியாயமான பதில் கிடைக்கவில்லை.
எனவே, வரும் 9-ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்குவது என முடிவு செய்துள்ளோம்.
அ.தி.மு.க., தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான கூட்டமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு., உள்ளடங்கிய கூட்டமைப்பு இணைந்து, வேலை நிறுத்தத்தை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.