அரசின் 'உழவர்-அலுவலர்' தொடர்பு திட்டம் : அறிவிப்புடன் முடங்கியதால் வேதனை
அரசின் 'உழவர்-அலுவலர்' தொடர்பு திட்டம் : அறிவிப்புடன் முடங்கியதால் வேதனை
ADDED : ஆக 25, 2025 11:38 PM
உடுமலை:
வேளாண் பட்ஜெட்டில் அறிவித்து, இரண்டு ஆண்டுகளாகியும், உழவர் - அலுவலர் தொடர்பு திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததால், அத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக அரசு கடந்த 2023 வேளாண் பட்ஜெட்டில், 'உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம், 2.0' செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை உட்பட வேளாண் துறை சார்ந்த அனைத்து துறைகளையும், ஒரே துறையின் கீழ் இணைக்க திட்டமிடப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட வாரியாக, வேளாண், தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பு, துறை சார்ந்து பணியில் உள்ள அலுவலர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது.
'இத்திட்டத்தில், 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்பட்டு, அவர் வாயிலாக பயிர் சாகுபடி, ஆலோசனை, தொழில்நுட்ப பயிற்சி, சந்தை வாய்ப்பு என விவசாயிகளுக்கு அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது வேளாண் விரிவாக்க களப்பணி செய்து வரும் உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றம் வேளாண் வணிக உதவி அலுவலர்கள் கூடுதல் பணிச்சுமையால் திணறி வருகின்றனர்.
'வருவாய் கிராம எண்ணிக்கையின் அடிப்படையில், சமச்சீரற்ற முறையில், பணி ஒதுக்கப்பட்டுள்ளதால், துறை திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் விவசாயிகளிடம் எடுத்து செல்ல பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கிறோம்.
எனவே, வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி, உழவர் - அலுவலர் தொடர்பு திட்டத்தை செயல்படுத்தி, பணியிடங்களை ஒதுக்க வேண்டும்', என தமிழக முதல்வருக்கு சில அலுவலர்கள் சங்கங்கள் சார்பில் சமீபத்தில் மனுவும் அனுப்பினர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே திட்டம் செயல்பாட்டுக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது.