கொடி நாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்: பொதுமக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்
கொடி நாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்: பொதுமக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்
ADDED : டிச 08, 2025 01:43 AM

சென்னை: 'ராணுவ வீரர்களுக்கு நாம் துணை நிற்பதை உறுதிப்படுத்தும் வகையில், ராணுவத்தினரின் கொடி நாள் நிதிக்கு, அனைவரும் முழு மனதுடன் தாராளமாக நிதி வழங்க வேண்டும்' என, பொதுமக்களுக்கு கவர்னர் ரவி வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.
அவரது அறிக்கை:
நம் நாட்டின் மக்களை, பாதுகாப்புடன் வைத்திருக்கும் ராணுவத்தின் தன்னலமற்ற சேவை, துணிவு, தியாகம் போன்றவற்றை நினைவூட்டும் நாளே கொடி நாள்.
இந்திய ராணுவம் உலகிலேயே மிகச் சிறந்த ராணுவமாகும். நிபுணத்துவம், வீரம், கடமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு புகழ் பெற்றது.
எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பது முதல், மனிதாபிமான நடவடிக்கைகள், பேரிடர் கால நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வது வரை, அவர்களின் சேவைகளுக்கு எல்லையே இல்லை.
அவர்களின் கட்டுப்பாடும், நிபுணத்துவமும், 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.
நம் முப்படை வீரர்கள், துல்லியத்துடன், தைரியத்துடன், உணர்திறனுடன் செயல்பட்டு, பாகிஸ்தான் உடன் விரைவான நேரடி மோதலில், தீர்க்கமான வெற்றியை பெற்றதை உலகமே கண்டது.
ராணுவத்தின் கொடி நாள், திறன் வாய்ந்த இந்தியா, சக்திமிக்க ராணுவம் ஆகியவற்றை போற்றுவதற்கானதாகும்.
சீருடை அணிந்து பணிபுரியும் ராணுவ வீரர்களை மட்டுமின்றி, ஒவ்வொரு சவாலின் போதும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும், அவர்களின் குடும்பத்தினரையும் நாம் கவுரவிப்போம்.
ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தவும், அவர்களுக்கு துணையாக இருக்கவும், கொடி நாளின் போது நாம் உறுதி எடுப்போம்.
நம் நாட்டின் பாதுகாப்பு, மீண்டெழும் தன்மை, தற்சார்பு போன்றவற்றை வலுப்படுத்த, நாம் ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.
இந்த நாளில் கொடி அடையாளத்துடன் நின்று விடாமல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அர்த்தமுள்ள ஆதரவை அளித்து, நம் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவோம்.
கொடி நாளுக்கான பங்களிப்பின் வழியே, நம் நீடித்த ஆதரவை பெற, தகுதி உடையவர்களாக ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். கொடி நாளுக்கு, நாம் அளிக்கும் ஒவ்வொரு பங்களிப்பும், நம் கூட்டு பொறுப்புணர்வை வலுப்படுத்தும்.
ராணுவத்தினரின் கொடி நாள் நிதிக்கு நிதி அளிப்பதன் வழியே, நம் படைவீரர்களின் கண்ணியத்திற்கும், நலனுக்கும், நாம் துணை நிற்பதுடன், முன்னாள் படைவீரர்களுக்கும், போரினால் கணவரை இழந்திருப்போருக்கும், நம்மால் உதவ முடியும்.
எனவே, தமிழக மக்கள் கொடி நாள் நிதியை, முழு மனதுடன் தாராளமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கவர்னர் கூறியுள்ளார்.

