முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் ஆவின் முறைகேடு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் ஆவின் முறைகேடு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை
ADDED : ஏப் 15, 2025 11:50 PM
'ஆவின் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால், அவர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
கடந்த, 2016 -- 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்போது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் ௩ கோடி ரூபாய் அளவுக்கு பெற்று முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின், ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
புகார் தாரரான ரவீந்திரன் என்பவர், இந்த வழக்கில் போலீசார் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.
ஆனாலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ராஜேந்திர பாலாஜி மற்றும் தமிழக அரசு தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு தடை விதித்ததுடன், ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு சமர்ப்பித்த கோப்பின் மீது கவர்னர் உடனடியாக முடிவை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் அனுமதி வழங்கி இருப்பதால், அதன் அடிப்படையில், அடுத்த ஓரிரு நாட்களில், மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுடில்லி சிறப்பு நிருபர் -