தமிழகத்திற்கு தனி நெடுஞ்சாலை ஆணையம்; சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
தமிழகத்திற்கு தனி நெடுஞ்சாலை ஆணையம்; சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
ADDED : டிச 17, 2024 05:46 AM
சென்னை : தமிழகத்திற்கென தனியாக மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கிஉள்ளார். இதையடுத்து, ஏழு பேர் இடம் பெறும் ஆணையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அமைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, இவற்றின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக, சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வாகன நடமாட்டம் அதிகரித்துள்ள பல சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த, மாநில அரசு வாயிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, 2016 முதல் அனுப்பப்பட்ட பல பரிந்துரைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிடப்பில் வைத்துள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, இச்சாலைகளை விரிவாக்கம் செய்து பராமரிக்க, தி.மு.க., அரசு முடிவெடுத்துள்ளது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அறிவிப்பை, சட்டசபையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். அதற்கான சட்ட மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைகள், சுங்க கட்டண சாலையாக மாறும் என்பதால், இதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், 'சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும்' என, அமைச்சர் வேலு அளித்த விளக்கத்தை ஏற்று, மசோதாவுக்கு அக் கட்சிகள் ஆதரவு அளித்தன.
இதையடுத்து, சட்டசபையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, அதற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தலைவர், மூன்று முழு நேர உறுப்பினர்கள், மூன்று பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சாலை மேம்பாட்டு பணிகளில் அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற பொறியாளர்களை, உறுப்பினர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

