வாக்காளர் எண் பெற கவர்னர் உத்தரவிடவில்லை ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் 'பல்டி'
வாக்காளர் எண் பெற கவர்னர் உத்தரவிடவில்லை ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் 'பல்டி'
ADDED : மார் 16, 2024 12:41 AM
சென்னை:'மாணவர்களின் வாக்காளர் அட்டை விபரங்களை பெற கவர்னர் அலுவலகம் உத்தரவிடவில்லை' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பதிவாளர் ராமகிருஷ்ணன் பி.எட்., -- எம்.எட்., கல்லுாரிகளுக்கு நேற்று முன்தினம் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில் கூறியிருந்ததாவது:
தமிழக கவர்னர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. அதன்படி கல்வியியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வரும் 19ம் தேதிக்குள் பல்கலைக்கு இ-மெயிலில் அனுப்ப வேண்டும். இந்த விபரங்கள் கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட உள்ளன.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த சுற்றறிக்கை அரசியல் கட்சிகள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் கல்வியியல் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், மீண்டும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு அதில் 'மாணவர்களின் வாக்காளர் அட்டை எண் விபரங்களை கல்லுாரிகள் சேகரிக்க வேண்டாம்' என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதிவாளர் ராமகிருஷ்ணன், நேற்று மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மார்ச் 14ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை எண் விபரம் சேகரிப்பு தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கை தவறானது. கவர்னரின் செயலர் அலுவலகத்தில் இருந்து அதுபோன்ற எந்த ஒரு தகவலும் பல்கலையில் பெறப்படவில்லை.
கடந்த 11ம் தேதி கவர்னர் மாளிகையில் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை கவர்னர் நடத்தினார். அதில் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் விபரங்களை வாக்காளர்களாக பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தான் கூறப்பட்டது.
இந்த தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் தேர்தல் முடிந்ததும் கவர்னரால் பாராட்டப்படலாம். எனவே மாணவர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பதிவாளர் முன்னுக்குப் பின் முரணான சுற்றறிக்கைகளை வெளியிட்டு வருவது கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

