தமிழகத்தில் தரமான கல்வி இல்லை ஆதங்கப்படுகிறார் கவர்னர் ரவி
தமிழகத்தில் தரமான கல்வி இல்லை ஆதங்கப்படுகிறார் கவர்னர் ரவி
ADDED : ஆக 15, 2025 01:34 AM

சென்னை:'சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் பட்டியலினத்தவர் கொல்லப்படுவது அவமானகரமானது' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, தமிழக கவர்னர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், இந்தியா கொடுத்த பதிலடியில், அந்நாட்டின் விமான தளங்கள் உட்பட முக்கியமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
இது பாகிஸ்தானை அவசர போர் நிறுத்தத்துக்கு மன்றாட வைத்தது. இந்தியாவின் இந்த வெற்றி, உலக ராணுவ வரலாற்றில் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும்.
மத்திய அரசு ஆதரவு பொருளாதார வளர்ச்சியில் பல, ஆண்டுகளாக, இந்தியாவின் ஆறு தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இதற்கு ரயில் பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், டிஜிட்டல் துறை ஆகியவை கணிசமான பங்களிக்கின்றன.
தமிழகத்தின் சுகாதாரம், கல்வித் துறை கட்டமைப்புகள், மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில் உள்ளன. சாத்தியமான அனைத்து வழிகளிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு ஆதரவளித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழக்கமான வரிப்பகிர்வு தவிர, 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மானியங்களாக வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளின் கல்விச்சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. 50 சதவீதத்திற்கும் அதிகமான உயர் நிலை பள்ளி மாணவர்களால், இரண்டு இலக்க கூட்டல், கழித்தல் கணக்குகளைக்கூட செய்ய முடியவில்லை.
சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், மற்றவர்களுக்குமான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது.
தரமான கல்வி இல்லாத நிலையில், அவர்களால் ஒருபோதும் சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் கடந்து, கண்ணியத்துடன் வாழ முடியாது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே, அவர்களின் தலைவிதியாக மாறி வருகிறது; இதை சரிசெய்ய வேண்டும்.
கிராமங்களிலும், பள்ளிகளிலும் பட்டியலினத்தவர்களையும், மற்றவர்களையும் பிரிக்கும் சுவர்கள் கட்டப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.
பொதுப் பாதையை பயன்படுத்த முற்படும்போது, பட்டியலினத்தவர் கொல்லப்படுகின்றனர். சமூக பாகுபாட்டுக்கு எதிராக, மாணவர்கள், இளைஞர்கள் சபதமேற்க வேண்டும். தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக, தமிழகத்தில் அதிகம் தற்கொலைகள் நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்.
அதிகார ஆசி இளைஞர்களிடம் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன், சக்தி படைத்தவர்கள் பின்னணியில் இருப்பதால், போதைப் பொருள் வினியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. தமிழகத்தின் எதிர்காலத்தை அழிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் குற்றங்கள், 33 சதவீதம் அதிகரித்துள்ளன.
இதனால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
நாம் என்ன செய்தாலும், அதில் தேசத்தின் நலனே பிரதானமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'பிரிவினை கொடுமைகளை பேச வேண்டும்'
'பிரிவினை கொடுமைகள்' நினைவு தினம் நிகழ்ச்சி, சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கவர்னர் ரவி பேசியதாவது:
பிரிவினை ஏற்பட, ஆங்கிலேயர்கள் காரணம் என சொல்வோம். ஆனால், சுதந்திரம் பெறும்போது, பிரிவினைகளை ஏற்படுத்தியதே மக்கள்தான். அப்போதிருந்த சிலர், அதாவது சில முஸ்லிம்கள், மற்றவர்களுடன் இணைந்து வாழ மறுத்து விட்டனர்.
பிரிவினை என்பது 5,000 ஆண்டுகளாக, இந்த மண்ணில் நிகழவில்லை. நம் பாரதத்தின் கொள்கையே, 'நாம் அனைவரும் ஒரே குடும்பம்' என்பதுதான். உலகிற்கும் அதையே பாரதம் கற்றுக் கொடுத்தது. பிரிவினைக்கு பின், கிழக்கு பாகிஸ்தானில், முஸ்லிம்கள் அல்லாதோர் எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்தது.
தற்போது 8 சதவீதமாக குறைந்துள்ளது. ஏராளமானோர் மதம் மாற்றப்பட்டனர். பலர், அங்கிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்து வரும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் சட்டத்தை, பிரதமர் மோடி செயல் படுத்தி இருக்கிறார்.
தற்போது, பிரிவினை எல்லாம் முடிந்துவிட்டது என, நினைக்க வேண்டாம். இன்றும், ஜம்மு - காஷ்மீர், கிழக்கு இந்திய பகுதிகளில் பிரிவினை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.