பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ரவி..மறுப்பு :நிரபராதியாகாததால் முதல்வரின் பரிந்துரை நிராகரிப்பு
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ரவி..மறுப்பு :நிரபராதியாகாததால் முதல்வரின் பரிந்துரை நிராகரிப்பு
UPDATED : மார் 19, 2024 01:22 AM
ADDED : மார் 18, 2024 12:01 AM

சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பொன்முடிக்கு, அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் நிரபராதி என நீதிமன்றம் அறிவிக்காததால், முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என கடந்த டிச., 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால், பொன்முடி தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக ஒப்படைக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பொன்முடி வெற்றி பெற்ற, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி காலியானதாக கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, சட்டசபை செயலகத்தில் இருந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவர் அந்த கடிதத்தை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினார்.
நிறுத்திவைப்பு
இந்நிலையில், பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, பொன்முடி எம்.எல்.ஏ., பதவியை இழந்ததால், திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்த அறிவிப்பு முறைப்படி தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
மீண்டும் எம்.எல்.ஏ.,வான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, கடந்த 13ம் தேதி கவர்னர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.
ஆனால், மறுநாள் காலை கவர்னர் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டில்லி புறப்பட்டு சென்றார்.
எனவே, பொன்முடி எப்போது அமைச்சராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்று முன்தினம் கவர்னர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என, முதல்வருக்கு கவர்னர் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், 'பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவர் நிரபராதி என நீதிமன்றம் கூறவில்லை.
'எனவே, அவரை அமைச்சராக்குவது சரியாக இருக்காது' என்று தெரிவித்துள்ளார். இதனால், பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது.
சிக்கல் உள்ளது
எம்.எல்.ஏ.,வாக இருக்கலாம், அமைச்சராகக் கூடாதா என்ற கேள்வி இந்த விவகாரத்தில் எழுந்துள்ளது.
இது குறித்து ராஜ்பவன் வட்டாரங்களில் கேட்ட போது, 'எம்.எல்.ஏ., பதவி என்பது சபாநாயகர் அதிகாரத்துக்கு உட்பட்டது.
'மேலும், இறுதி தீர்ப்பு வரும் வரை ஒரு தொகுதி காலியாக இருக்கக்கூடாது. எனவே, பொன்முடிஎம்.எல்.ஏ.,வாக இருப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நிரபராதி என அவர் அறிவிக்கப்படாததால், அமைச்சர் பதவி ஏற்பதில் சிக்கல் உள்ளது' என்று தெரிவித்தன.

